தொகுதியின் முக்கிய பிரச்னைகளை தனது சமூக வலைத்தள நண்பர்கள், தொடர்வாளர்களிடம் தருமபுரி எம்.பி. நேரில் கேட்டறிந்தார்
தருமபுரி மக்களவைத் தொகுதியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி. செந்தில்குமார். மருத்துவரான இவர், கட்சிப் பணிக்காக சென்னையில் இருந்தபோது, தருமபுரி பகுதியைச் சேர்ந்த தனது சமூக வலைத்தள நண்பர்கள் மற்றும் தொடர்வாளர்கள் சிலரை நேரில் சந்திக்க அழைத்தார். நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த சந்திப்பில், மக்களவையில் தருமபுரி தொகுதி மக்கள் சார்பில் முன்வைக்க வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து நேரில் கேட்டறிந்தார்.
காஃபி வித் ட்விட்டர் ஃப்ரண்ட் என்பதுபோல அமைந்த சந்திப்பில், தொகுதிப் பிரச்னைகள் குறித்து விரிவாக அலசப்பட்டது. அவற்றைக் குறிப்பெடுத்துக் கொண்ட எம்.பி. செந்தில்குமார், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அவற்றைப் பேச இருப்பதாக தெரிவித்தார். தருமபுரியில் தொழிற்பூங்கா வேண்டும் என்பது பரவலான கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதற்கு தொழிற்பூங்கா அமைவதை நிறைவேற்ற முயற்சிப்பேன் என எம்.பி உறுதி அளித்தார். வெற்றி பெற்ற பின்னர் தொகுதியின் குறைகளைப் பற்றி பெரிதும் சிந்திக்காத சில அரசியல்வாதிகள் மத்தியில் செந்தில்குமாரின் புதிய முயற்சிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.