தமிழ்நாடு

நெற்பயிர்களை அழிக்கும் ‘புது நோய்’ - அச்சத்திலும், வருத்தத்திலும் விவசாயிகள்

நெற்பயிர்களை அழிக்கும் ‘புது நோய்’ - அச்சத்திலும், வருத்தத்திலும் விவசாயிகள்

webteam

தருமபுரியில் நெற்பயிர்களை தாக்கி அழிக்கும் புது வகை நோயை தடுக்க வேளான்துறை அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, காரிமங்கலம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள், இந்த ஆண்டு நெல் சாகுபடி செய்தனர். அங்கு வழக்கத்தை விட இந்த ஆண்டு கூடுதலாக பருவமழை பெய்துள்ளதால், சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டது. பரவலான மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து நெல் சாகுபடிக்கு தேவையான தண்ணீரும் கிடைத்துவிட்டது. இதனால் நெல் பயிர்கள் செழிப்பாக வளர்ச்சி அடைந்ததுள்ளது.

இந்நிலையில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் உள்ள ஒரு சில வயல்களில் நெற்பயிர்களை புதிய வகை நோய் தாக்கியுள்ளது. இதனால் பயிர்கள் கதிர் பால் (பூட்டை) பிடிக்கின்ற நேரத்தில் லேசாக காய ஆரம்பித்து, பின்னர் முழுவதுமாக காய்ந்து அழிந்து விடுகிறது. இந்த காய்ந்த பயிர் குத்தல்களை பிடுங்கினால் முழுவதும் நிலத்திலே நிற்கிறது. பயிர்கள் மட்டுமே தனியாக வருகிறது.

இதுவரை இது போன்ற நோய்கள் நெல் பயிர்களை தாக்கியதில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்த புதுவகை நோய் குறித்து, உரக்கடை உரிமையாளர்கள் மற்றும் மருந்துக் கடைகளிலும் தெரியவில்லை என விவசாயிகளிடம் கூறுகின்றனர். இதனால் மருந்துகளையும் தெளிக்க முடியாமல் நெற்பயிர்கள் வீணாக அழிந்து வருகிறது என விவசாயிகள் புலம்புகின்றனர்.

மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் நெற்பயிர் சாகுபடியில் விவசாயிகள் இறங்கியுள்ளனர். இந்த சூழலில் புதிய வகை நோய் தாக்குவது வேதனையாக இருப்பதாக விவசாயிகள் வருந்துகின்றனர். இதுதொடர்பாக வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சரி செய்வதற்கான வழிமுறைகளை வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.