தமிழ்நாடு

கணவருக்காக 2 நாட்களாக இளம்பெண் தர்ணா போராட்டம்

Rasus

கணவர் வீட்டின் முன் இளம்பெண் நடத்தி வரும் தர்ணா போராட்டம் 2-வது நாளாக தொடர்கிறது. கணவர் தன்னுடன் வாழ வரும் வரை போராட்டம் தொடரும் என அப்பெண் தெரிவித்துள்ளார்.

சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். திருவள்ளூரைச் சேர்ந்தவர் ஜெயலெட்சுமி. வயது 34. இரண்டு பட்டப்படிப்பை முடித்துள்ள இவருக்கும் செல்வக்குமாருக்கும் கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றிருக்கிறது. ஆன்லைன் மூலம் வரன் பார்த்து பெற்றோர்கள் சம்மத்துடன் இத்திருமணம் நடைபெற்றிருக்கிறது. திருமணத்தின்போது வரதட்சணையாக செல்வக்குமாருக்கு ஜெயலெட்சுமி வீட்டின் சார்பில் 40 சவரன் நகைள் உள்பட சீர்வரிசை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இதுதவிர கார் மற்றும் 2.5 லட்சம் ரூபாய் பணம் செல்வக்குமார் வீட்டின் சார்பில் அப்போது கேட்டிருக்கின்றனர். ஆனால் அதை தர முடியாது என ஜெயலெட்சுமி வீட்டார் சார்பில் தெரிவிக்கப்பட்ட பின்பும், இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

தற்போது தம்பதியினருக்கு ஒன்றரை வயது ஆண் குழந்தையும் உள்ளது. ஆனால் திருமணம் ஆன நாள் முதலே கணவன்- மனைவிக்குள் அடிக்கடி தகராறு வந்திருக்கிறது. கோபத்தில் அடிக்கடி ஜெயலெட்சுமியை செல்வக்குமார் தாக்கியிருக்கிறார். இதுதொடர்பாக மடிப்பாக்கம் காவல்நிலையத்திலும் ஜெயலெட்சுமி சார்பில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஜெயலெட்சுமியை திருமணம் ஆன நாள் முதலே அவரது மாமியாருக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. ஜெயலெட்சுமியை எப்படியாவது தனது மகனிடம் இருந்து பிரித்துவிட வேண்டும் என்ற எண்ணத்திலும் இருந்ததாகக் கூறப்படுகிறது. நாத்தனார் பிரச்னையும் ஜெயலெட்சுமிக்கு இருந்திருக்கிறது.

இந்நிலையில் ஜெயலெட்சுமி தனது தந்தை வீட்டுக்குச் சென்ற நேரத்தில் சொல்லாமல் கொள்ளாமல் மடிப்பாக்கத்தில் தனது வீட்டை ஜெயலெட்சுமிக்கு தெரியாமல் வேளச்சேரியிலுள்ள புதிய வீட்டிற்கு மாறியிருக்கிறார் கணவர் செல்வக்குமார். இந்நிலையில் கணவருடன் சேர்ந்து வாழ தனது மாமியார் தடையாக இருப்பதாகக் கூறி கணவர் வீட்டின் முன் கைக் குழந்தையுடன் ஜெயலெட்சுமி  நேற்ற முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.  ‘கணவர் நல்லவர்தான். மாமியார், நாத்தனார் பிரச்னை தாங்க முடியல. என்னை எப்படியாவது கணவருடன் சேர்ந்து வாழ வழி செய்யுங்கள்’ எனக் கூறி அப்பெண் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே செல்வக்குமாருடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக அப்பெண்ணின் போராட்டம் தொடர்கிறது. 

கணவர் தன்னுடன் வாழ வரும் வரை போராட்டம் தொடரும் என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.