செய்தியாளர்: சே.விவேகானந்தன்
தருமபுரி மாவட்டம் முழுவதும் 1000 ஹெக்டருக்கு மேல் விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்து வருகின்றனர். தற்பொழுது மஞ்சள் பயிர் முழுவதும் விளைந்துள்ளது. இதையடுத்து விவசாயிகள் அறுவடைக்கு தயாரான நிலையில், அரூர், கடத்தூர், தென்கரைக்கோட்டை, பொம்மிடி, செட்டிக்கரை, ஒடசல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மஞ்சளை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்னும் ஒரு மாத காலத்திற்குள் இந்த அறுவடை பணிகள் முடிவுற்று வேகவைக்கும் பணிகள் தொடங்கவுள்ளது. கடந்த ஆண்டு மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்காத நிலையில், இந்த ஆண்டு நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர். இதனால் கூலித் தொழிலாளர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் கிடைப்பதால், தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.