தமிழ்நாடு

“அவர்களே தயாரித்த புகாரில் கையெழுத்து இடச் சொன்னார்கள்” தர்மபுரி மாணவியின் தந்தை குற்றச்சாட்டு

“அவர்களே தயாரித்த புகாரில் கையெழுத்து இடச் சொன்னார்கள்” தர்மபுரி மாணவியின் தந்தை குற்றச்சாட்டு

webteam

தங்கள் மகளுக்கு நேர்ந்த கொடுமைக்கு நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினரிடம் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காமல் தங்களை அலைகழித்ததாக, தர்மபுரியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த மாணவியின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

ஆத்தூர் அருகே தளவாய்ப்பட்டியைச் சேர்ந்த 13 வயது சிறுமி தலை துண்டித்துக் கொடூரமான முறையில் செய்யப்பட்ட கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அந்த அதிர்ச்சி மறைவதற்குள் தர்மபுரி மாவட்டத்தில் மற்றொரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அரூரை அடுத்த சிட்லிங் என்ற மலைக்கிராமத்தைச் சேர்ந்த 12 படித்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, 5 நாட்களுக்கு பின்னர் உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் அந்த மாணவி தனது உயிரை நீர்த்துள்ளார். 

அதேகிராமத்தைச் சேர்ந்த சதீஸ், ரமேஷ் என்ற இரண்டு பேர் கொடூரமான முறையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர்களது பெற்றோர்கள் கூறியுள்ளனர். சதீஸ், ரமேஷ் இருவரும் தற்போது தலைமறைவாகியுள்ளனர். குற்றவாளிகளை கண்டுபிடித்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனிடையே, தங்கள் மகளுக்கு நேர்ந்த கொடுமைக்கு நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினரிடம் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் தங்களை அலைகழித்ததாக உயிரிழந்த மாணவியின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார். தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்களாக உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் தங்களது மகள் இறந்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக கோட்டப்பட்டி காவல்நிலையத்தில் மாணவியின் தந்தை அண்ணாமலை அளித்த புகாரில், “எனது மகள் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து என்னுடைய மனைவியிடம் கூறியுள்ளார். உடனே கோட்டப்பட்டி காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தோம். ஆனால், காவல் நிலையத்தில் என்னுடைய புகாரினை வாங்க மறுத்தார்கள். அதன் பின்னர் காவல் நிலையத்தில் அவர்களே ஒரு புகார் தயார் செய்து என்னிடம் கையெப்பம் பெற்றுக் கொண்டார்கள். அதோடு, இந்தச் சம்பவம் குறித்து யாரிடமும் கூறக்கூடாது என்று அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத காவலர்கள் மிரட்டி அனுப்பினார்கள். 

என்னிடம் எழுதி வாங்கிய புகார் மனுவுக்கு நடவடிக்கை எடுக்காமல், என்னை மிரட்டி ரூ6 ஆயிரம் பணம் வாங்கினார்கள். என் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை கொடுப்பதற்கு வசதியில்லாமல் நாங்கள் இருந்தோம். மறுநாள் (6.11.18) நாங்கள் மீண்டும் காவல்நிலையம் சென்றோம். அப்பொழுது, ஒரு பெண் காவலர் உட்பட இரண்டு காவலர்கள் எங்களது மகளை தர்மபுரியில் உள்ள காப்பகத்துக்கு கொண்டு போய் சேர்த்தார்கள். எங்களையும் ஊருக்கு போகும்படி மிரட்டி அனுப்பினார்கள். எனது மகளை மருத்துவமனையில் சேர்க்காமல் திட்டமிட்டு காவல்துறையினர் அலைகழித்தனர். 

மீண்டும் 7ஆம் தேதி தர்மபுரியில் உள்ள அந்த காப்பகத்தை தேடிப்பிடித்துச் சென்றோம். அப்போது, எனது மகளின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. பின்னர், காப்பகத்தில் உள்ளவர்களை கேட்டுக் கொண்டு, எனது மகளை தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கு இரண்டு நாட்களாக சரிவர சிகிச்சை கொடுக்கப்படவில்லை. என் மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். 

என் மகளை திட்டமிட்டு பாலியல் வன்கொடுமை செய்த சதீஸ், ரமேஷ் ஆகிய இருவரையும், எங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களே தயார் செய்த புகாரில் கையொப்பம் பெற்றும் எங்களை அலைகழித்த காவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.