தமிழ்நாடு

நாகரிகத்தை மறக்காத தர்மபுரி மக்கள்- புதிர்நிலைக்கு பூஜையிட்டு வழிபாடு

webteam

தருமபுரி மாவட்டத்தில் கற்கால வழிபாட்டை மறவாமல் புதிர்நிலைக்கு பூஜை செய்து வழிபடும் மக்களின் உணர்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  

நாகரிக வளர்ச்சியால், பழங்கால நினைவு சின்னங்கள் அழிந்து வரும் நிலையில், தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல வரலாற்று எச்சங்கள், அம்மாவட்டத்தின் பெருமையை மக்களுக்கு இன்றளவும் உணர்த்தி வருகிறன. குறிப்பாக, கற்காலத்தில் குறிப்பிட்ட சில நாடுகளில் வழிபாடு செய்யப்பட்டு வந்த புதிர்நிலை கற்கள் தருமபுரி, கம்பைநல்லூர் அடுத்த வெதரம்பட்டியில் இன்றளவும் அழியாமல் இருக்கின்றன.

உலகில் அதிகளவு புதிர் நிலைகள் கொண்ட நாடாக ஸ்காண்டிநோவியா விளங்குகிறது. அங்கிருக்கும் கற்கள் 300 முதல் 600 ஆண்டுகள் பழைமையானவை. கிரேக்கத்தில் பைலோஸ் என்ற இடத்தில் கிடைத்த சுடுமண் தட்டு ஒன்றில் வரையப்பட்டுள்ள சதுர புதிர்நிலை போன்ற புதிர்நிலை கற்கள் தருமபுரி வெதரம்பட்டியில் 1,600 சதுர அடி பரப்பளவில் உள்ளது.

புதிர்நிலை என்பதை ஒரு பெண்ணின் வயிற்று பகுதியாகவும், அதன் வெளி பகுதியை குழந்தை பிறக்கும் பகுதியாக மக்கள் கருதுகின்றனர். குழந்தைகள் சுகப்பிரசவமாக பிறக்கவும், அக்குழந்தை ஆரோக்கியமாக வளரவும் புதிர்நிலைகளை மக்கள் வழிபட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக வெதரம்பட்டி கிராம மக்கள் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாட்களில் அங்குள்ள புதிர்நிலைகளுக்கு பொங்கல் வைத்து, அங்குள்ள கற்களுக்கு அதனை படையலிட்டு வழிபடுவார்கள்.

இந்தாண்டும் அந்த முறை கடைப்பிடிக்கப்பட்டது. குழந்தைகள் நலமுடன் இருக்கவும், நோய் இல்லாமல் வாழவும் ஏழு சுற்றுள்ள புதிர்நிலை கற்களை மக்கள் சுற்றி வழிபட்டனர்.