தருமபுரி மாவட்டத்தில் சாலையை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்படாதததைக் கண்டித்து அதிகாரிகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வழியாகச் செல்லும் சேலம் - வேலூர் பிரதான சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டதால், அதை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில், 9 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் விடப்பட்டு 7 மாதங்கள் ஆகியும் பணிகள் தொடங்கப்படாததால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அவர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரை வரவழைத்து சாலையை ஆய்வு செய்தார். அப்போது, பணிகள் தொடங்காததற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டார். நிதி ஒதுக்கி ஒப்பந்தம் விடப்பட்டு 7 மாதங்கள் ஆகியும், இன்றுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. அதற்கான காலதாமதம் ஏன்..? தொடர்ந்து இந்தச் சாலையில் இதுவரையில் எத்தனை விபத்துகள் நடந்து இருக்கின்றன? எத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறது? என்பது குறித்த பல்வேறு விவரங்களை நாடாளுமன்ற உறுப்பினர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டார்.
ஆனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதுகுறித்த விவரங்கள் தற்போது கையில் இல்லை, போதிய விவரங்களை இரண்டு நாட்கள் கழித்து தருவதாக தெரிவித்தனர். துறை சார்ந்த விவரங்களை கூட கையில் வைத்துக் கொள்ளாமல் வெறுமனே வேடிக்கை பார்ப்பதற்காகவா? இங்கு வந்தீர்கள் என அதிகாரிகளை கடுமையாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரித்தார்.
இதனால் நாடாளுமன்ற உறுப்பினருக்கும், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பிறகு, விபத்து குறித்த விவரங்களை மட்டும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் வழங்கினர்.