செய்தியாளர்: சே.விவேகானந்தன்
தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில், நேற்றிரவு 10 மணிக்கு அரசு பேருந்து ஒன்று பொம்மிடி செல்வதற்காக பயணிகளை ஏற்றிக் கொண்டு தயார் நிலையில் இருந்துள்ளது. அப்பொழுது ஓட்டுநர் பேருந்தை ஸ்டார்ட் செய்துள்ளார்.
நீண்ட நேரமாக முயற்சி செய்தும் பேருந்து ஸ்டார்ட் ஆகாததால் பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகளை கீழே இறக்கிய நடத்துநர், பயணிகளுடன் இணைந்து பேருந்தை தள்ளிச் சென்றுள்ளார்.
பேருந்து நிறுத்தும் நடைமேடையில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு பயணிகள் அரசு பேருந்து தள்ளிச் சென்றுள்ளனர். இதனை பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து அரசு பேருந்துகளின் செயல்திறனை அரசு விரைந்து பரிசோதிக்க வேண்டும் என்றும், பழுதுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.