அரூரில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் தேவாதியம்மன் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம் அரூரில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தினர் சுமார் 2000 குடும்பங்கள் உள்ளன. இந்த சமூகத்தினர் ஆண்டுதோறும் தை மாதத்தில் தங்களது தொழில், வியாபாரம் நலமுடன் இருக்க, தேவாதியம்மன் திருவிழாவை நடத்துவர். இதில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு ஆடு வெட்டி, சமைத்து அதை வெளியில் எடுத்துச் செல்லாமல் சாப்பிடுவது வழக்கம். இந்த திருவிழா மூன்று தலைமுறையாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தேவாதியம்மன் திருவிழா வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது. இந்த திருவிழாவில் முதலில் வனத்தில் பச்சை பந்தல் போட்டு சாமிக்கு கரகம் அலங்கரித்து ஊர்வலமாக எடுத்துச் சென்று முதலில் ஒரு ஆடு வெட்டி, பூஜை செய்து ஆட்டின் இறைச்சியை தீயில் சுட்டு பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இங்கு வழங்கப்படும் பிரசாதம் மற்றும் ஆட்டின் இறைச்சியை அந்த சமூகத்தை சேர்ந்த குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டும் சாப்பிட வேண்டும். மற்றவர்களுக்கு கொடுப்பதில்லை. இந்த திருவிழாவில் சுமார் 500 ஆடுகள் வெட்டப்பட்டு, சுமார் 2000 குடும்பங்களுக்கு இறைச்சி வழங்கப்பட்டது. மேலும் இந்த திருவிழாவில், முக்கிய அம்சமாக பெண்கள் இல்லாமல் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு ஆடு வெட்டி சமைத்து சாப்பிடும் கறி விருந்து நடைபெற்றது.
இதில் அந்த சமூகத்தை சார்ந்த ஆண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த பூஜையில் வைக்கும் பொருட்கள், மீதி இருக்கும் உணவு மற்றும் இறைச்சியை வீட்டிற்கு எடுத்துச் செல்லக் கூடாது என்பதால், அதை குழி தோண்டி புதைத்தனர்.