2001 முதல் 2021 வரை 5 தேர்தல்களில் போட்டியிட்ட பாமக, 2001, 2006 மற்றும் 2021 தேர்தல்களில் வென்றது. தற்போது பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி இந்த தொகுதியில் களமிறங்கவிருப்பதால், நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது
நட்சத்திர தொகுதியில் நாம் காணவிருப்பது பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா போட்டியிடும் தருமபுரி தொகுதி. பாமகவுக்கு மூன்று முறை வெற்றியைத் தந்தது தருமபுரி சட்டமன்றத் தொகுதி. 2001 முதல் 2021 வரை 5 தேர்தல்களில் போட்டியிட்ட பாமக, 2001, 2006 மற்றும் 2021 தேர்தல்களில் வென்றது. தற்போது பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி இந்த தொகுதியில் களமிறங்கவிருப்பதால், நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது தருமபுரி தொகுதி. கடந்த மக்களவைத் தேர்தலில் தருமபுரியில் போட்டியிட்ட சவுமியா அன்புமணி, தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் மட்டும் சுமார் 79,000 வாக்குகளை பெற்றார். இதுவே, சட்டமன்றத் தேர்தலில் அவர் தருமபுரி தொகுதியை தேர்வுசெய்ய காரணமாகக் கூறப்படுகிறது. பெரும்பாண்மையாக வன்னியர் மற்றும் பட்டியல் சமூகத்தினர், சிறுபான்மையினர், வியாபாரிகள், தொழிலாளர்கள் மிகுந்த தொகுதி தருமபுரி. அங்கு சுமார் 2 லட்சத்து 57ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த 2011 தேர்தலில் தேமுதிகவும், 2016இல் திமுகவும் வென்ற இந்தத் தேர்தலில், கடந்த 2021 தேர்தலில் பாமக பிரம்மாண்ட வெற்றிபெற்றது. அக்கட்சி வேட்பாளர் வெங்கடேஸ்வரன் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றார். இந்த முறை அதிமுக கூட்டணியில் இருப்பது பாமகவுக்கு சாதகமாக இருந்தாலும், தேமுதிக திமுக கூட்டணியில் இருப்பது போட்டியை கடுமையாக்கும் என கருதப்படுகிறது. பாமகவின் சவுமியா அன்புமணிக்கு எதிராக தேமுதிகவின் இளங்கோவன் போட்டியில் உள்ளார். மேலும் நாதகவின் சாந்தலட்சுமி, தவெகவின் சிவன் ஆகியோரும் களத்தில் உள்ளனர். இவர்களைத் தவிர, பாமக இரண்டாக பிரிந்துள்ள நிலையில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பில் மாவட்டச் செயலர் சரவணனும் களத்தில் நிற்பதால், தொகுதியில் விறுவிறுப்பு கூடியுள்ளது.