அரூரில், அதிமுகவிற்கு தலைமையேற்க சசிகலாவை வரவேற்று அதிமுக ஒன்றிய துணைச் செயலாளர் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை முடிந்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக, விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா, சிகிச்சை முடிந்து பெங்களூரில் உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும், ‘சசிகலாவே அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர்‘ என அவரை வரவேற்று பல்வேறு இடங்களில் சுவரொட்டிகளை சிலர் ஒட்டி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டம் அரூரில் அதிமுக ஒன்றிய துணைச் செயலாளர் சி.எம்.கோட்டி என்பவர், சசிகலாவை வரவேற்று சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார்.
அந்த சுவரொட்டியில் சசிகலாவே அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்றும், தமிழ்நாட்டை வழிநடத்த தமிழகத்திற்கு வரவேற்கும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. அரூர் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பேருந்து நிலையம், கச்சேரி மேடு, வட்டாட்சியர், பிடிஓ அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதிமுக அரூர் ஒன்றிய துணைச்செயலாளர் சசிகலாவை வரவேற்று ஒட்டியுள்ள சுவரொட்டி அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.