Election ANI
தமிழ்நாடு

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் | யாருக்கு வெற்றி? இன்று வாக்கு எண்ணிக்கை!

11 வேட்பாளர்கள் களத்திலுள்ள தட்டாஞ்சாவடி தொகுதியில், 4 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.

Prakash J

மதுராந்தகம், தாராபுரம், புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தவிர்த்த மற்ற 5 தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்தச்சூழலில்தான், தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இந்த இரு தொகுதிகளிலும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

தாராபுரம்

மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக, திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் என ஐந்து முனை போட்டி நிலவியது. இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் 85.99% , தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவாகியிருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதேபோல் புதுச்சேரி தட்டாஞ்சாவடியிலும் 80.81% வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்த இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. மதுராந்தகத்தில் 21 சுற்று வாக்கு எண்ணிக்கையும், தாராபுரத்தில் 23 சுற்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. 11 வேட்பாளர்கள் களத்திலுள்ள தட்டாஞ்சாவடி தொகுதியில், 4 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.

மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் ஆகியோர் வேட்பாளர்களாக உள்ளனர். தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா ஆகியோர் களத்தில் உள்ளனர்.