தாராபுரம் அருகே வங்கி அதிகாரிகளின் நெருக்கடியால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக தாசில்தார் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குழந்தை பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜாமணி. இவர் தாராபுரம் புதிய வீட்டு வசதி வாரிய பகுதியிலுள்ள ஆக்சிஸ் வங்கியில் விவசாய கடன் பெற்று அதனை தவணை முறையில் திருப்பிச் செலுத்தி வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவால் விவசாய தொழில் முடங்கி போனதால் கடன் தவணையை அவரால் கட்டமுடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஆக்சிஸ் வங்கியில் இருந்து வந்த அதிகாரிகள் கடனை திருப்பி செலுத்த கோரி ராஜா மணியையும் ராஜாமணி குடும்பத்தினரையும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியதாக புகார் எழுந்தது.
வங்கி அதிகாரிகளின் அச்சுறுத்தல் காரணமாக அவமானம் அடைந்த விவசாயி ராஜாமணி கடந்த 4ஆம் தேதி விஷம் குடித்து பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவத்திற்கு காரணமான வங்கி நிர்வாகத்தை கண்டித்தும் வங்கிக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்யக் கோரியும் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 8ஆம் தேதி தாராபுரம் வங்கியை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என இரு தரப்பிலும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று தாராபுரம் தாசில்தார் கனகராஜன், கூடுதல் மாவட்ட துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயராம் ஆகியோர் முன்னிலையில் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தற்கொலை செய்து கொண்ட விவசாயி ராஜாமணி பெற்ற கடன் தொகை 14லட்சம், மற்றும் அதற்கான வட்டி உள்ளிட்டவைகளை முழுமையாக தள்ளுபடி செய்து அவரிடம் பெற்ற ஆவணங்களை 15 நாட்களில் வங்கி நிர்வாகம் திருப்பி செலுத்துவதாக முடிவு செய்யப்பட்டது.
மேலும், ராஜாமணியின் உயிரிழப்புக்கான 50 லட்ச ரூபாய் நஷ்ட ஈட்டை வங்கியின் உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவை அறிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.