தமிழ்நாடு

'இரண்டு மாசத்துல ஸ்கூல் போயி டாக்டராக போறேன்' மறுபிறவி எடுத்த தன்யஸ்ரீ !

'இரண்டு மாசத்துல ஸ்கூல் போயி டாக்டராக போறேன்' மறுபிறவி எடுத்த தன்யஸ்ரீ !

webteam

குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்த நபரால் தலையில் பலத்த காயமடைந்த பெண் குழந்தை மறுபிறவி எடுத்து மீண்டும் பள்ளிக்குச் செல்ல தயாராகிவிட்டாள்.

கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி பிரட் வாங்குவதற்காக தண்டையார் பேட்டையில் உள்ள கடைக்கு தன் தாத்தா உடன் சென்றபோது 3ஆவது மாடியில் மதுபோதையில் இருந்த நபர் தன்யஸ்ரீ மீது விழுந்ததில் தலை உட்பட உடலில் பலத்த காயம் ஏற்பட்டு தன் சுயநினைவை இழந்தார். பெற்ற மகளின் நிலைமையை கண்டு அழுவதா?, மருத்துவச் செலவுக்கு பணம் புரட்ட அலைவதா எனத் தெரியாமல் பித்துப்பிடித்தவர் போல் நின்றார் தன்யஸ்ரீயின் தந்தை ஸ்ரீதர். இது பற்றி ஸ்ரீதர் கூறும்போது, "தன்யஸ்ரீ கீழே விழுந்தபோது என் கையில் சுத்தமாய் பணம் இல்லை. முதல் மூன்று நாட்களுக்கு உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் தான் உதவினார்கள். அதன்பின் செய்திகளில் வந்த பின்பு பலர் வந்து நேரடியாக வந்து உதவினர். உதவியதோடு மட்டும் நிற்காமல் தன்யஸ்ரீக்காக வேண்டிக்கொண்டனர்" எனறபோது தன் மகள் மீண்டு வந்த சந்தோஷத்தை ஸ்ரீதரிடம் பார்க்க முடிந்தது.

கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ச் ஆன தன்யஸ்ரீயின் உடல்நலம் தொடர்ந்து தேறிவரும் நிலையில் நாளுக்குநாள் அவளின் சுட்டி தனமும் அதிகமாகியே வந்துள்ளது. ஓடுவது குதிப்பது தன் தந்தையை கண்டவுடன் அவர் மீது ஏறுவதுமாய் இருக்கும் தன்யஸ்ரீயை, பாப்பா பாத்து இடிச்சுக்கப் போற? என எச்சரிக்கும் அம்மாவுக்கும் அத்தைக்கும் அப்படித் தான் ஓடுவேன் ஆனால் கீழே விழமாட்டேன் என தைரியம் கூறுகிறாள் இந்த சேட்டைக் குருவி. இந்த சேட்டை குருவியை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப ஏற்பாடுகளும் நடக்கின்றன.

தான் பள்ளிக்கு செல்லப்போவது எப்போது? எதிர்கால லட்சியம் என்ன என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு தன்யஸ்ரீயே பதிலளித்தார் எப்போது ஸ்கூல் போக போறீங்க..? என்றால் "இன்னும் டூ மந்த்ல போக போறேன், ஸ்கூல் போயி என ஆக போறிங்க என்றால் "டாக்டர் ஆகப் போறேன்" என்கிறாள் தன் மழலை மொழியில். உற்றார் உறவினர்களின் ஆதரவாளும் முகம் தெரியாத பலரின் கொடை உள்ளத்தாலும் அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளாலும் தன் எதிர்காலம் நோக்கி நடைபோட தொடக்கி உள்ளாள் இந்த சுட்டிக் குழந்தை.