bridge
bridge file
தமிழ்நாடு

தனுஷ்கோடி டூ தலைமன்னார்: கடலில் சாலை போக்குவரத்து பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளதா?

webteam

செய்தியாளர்: ந.பால வெற்றிவேல்

"சிங்கள தீவினிக்கோர் பாலம் அமைப்போம் சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்" என்றார் மகாகவி பாரதி... நூறு வருடங்களுக்கு முன்பே இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் பாலங்கள் அமைத்து போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டம் இரு நாட்டு தரப்பிலும் இருந்தது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர், ராமர் பாலம், சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற காரணங்களினால் இந்தியாவையும் இலங்கையும் இணைக்கும் பாலம் அமைக்கும் திட்டம் கனவாக மட்டுமே இருந்தது.

srilanka

கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே இந்தியாவிற்கு வருகை தந்த போது, தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரை சுரங்க பாலம் அமைக்கலாம் எனும் யோசனை தெரிவிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. ஆனால், அந்தத் திட்டத்திற்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்த நிலையில், சுரங்க சாலை போக்குவரத்து பாதை அமைப்பதற்கான திட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், கடந்த வருடம் ஜூலை மாதம் இந்தியாவிற்கு விஜயம் தந்த ரன்னில் விக்ரமசிங்கவுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையில் இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் 23 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை போக்குவரத்து பாலம் மற்றும் பைப் லைன்கள் அமைப்பதற்கான திட்டம் முன்மொழிக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கு இலங்கை அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ராமேஸ்வரம் தீவில் இருந்து தலைமன்னார் வரை 23 கிலோமீட்டர் நீளத்திற்கு ஆதம்ஸ் பாலத்தை ஒட்டிய பகுதியில் மேம்பாலங்கள் அமைப்பதுதான் இந்த திட்டத்தின் முக்கிய சாராம்சம். இதற்கான முதற்கட்ட சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிப்பதற்கான பணிகளில் மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை ஈடுபட தொடங்கியுள்ளதாக மத்திய அரசின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கைக்குச் செல்லும் கச்சா எண்ணெய் பொருட்களில் 85 சதவீதம் இந்தியாவிலிருந்து கப்பல் மூலம் கொண்டு செல்லப்படும் நிலையில் அவற்றை பைப் லைன் மூலம் கொண்டு செல்வதற்கான திட்டம் தான் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது.

Ranil Wickremesinghe

அதோடு சேர்த்து சாலை வணிக போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் சாலை போக்குவரத்து பாலம் அமைப்பதற்கான திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது. முதல் கட்ட சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், புராதான சின்னமாக கருதப்படும் ராமர் பாலமும், கடல் சார் சூழலியல் மண்டலமாக கருதப்படும் பாக் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியின் சுற்றுச்சூழல் பாதிப்பு முக்கிய காரணிகளாக எடுத்துக் கொள்ளப்படும் என கூறப்படுகிறது. குறிப்பாக பவளப்பாறைகளும் அறிய வகை கடல்சார் உயிர்களும் பெற்றுள்ள இந்தப் பகுதியில் சாலை போக்குவரத்து அமைப்பதால் ஏற்படும் சூழலியல் பாதிப்பு குறித்தான காரணிகள் முக்கிய கருத்துகளாக எடுத்துக் கொள்ளப்படும்.

அதோடு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்திற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது ராமர் பாலம் என கூறப்படும் தீவுத்திட்டுகள் வழியே பாலம் அமைப்பதற்கான பணிகளில் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தனுஷ்கோடி அரிச்சல் முனையில் சுமார் அரை மணி நேரம் ஆன்மிக ரீதியாக நேரம் கழித்த பிரதமர் மோடி இது குறித்து அதிகாரிகளிடம் பேசியதாகவும் முதல் கட்ட தகவல் தெரிவிக்கப்படுகிறது.

சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டபின் விரிவான திட்ட அறிக்கையுடன் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் பாலம் உருவாக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதோடு ரயில் பாதையும் அமைப்பதற்கான வழித்தடத்தை போக்குவரத்து பாலத்தில் உருவாக்கம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.