தமிழ்நாடு

அத்தியாவசியத்திற்கு வெளியே வருவோரை கண்ணியமாக நடத்துங்கள் - டிஜிபி அறிவுறுத்தல்

webteam

அத்தியாவசிய பொருட்கள் வாங்கச் செல்பவர்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ளுமாறு காவல்துறையினரை டிஜிபி திரிபாதி கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியே வரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பால், காய்கறி, மளிகைக்கடைகள், கறிக்கடைகள் காலை 6 மணிமுதல் 1 மணிவரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் எனவும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக விலகளை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் சிலர் சமூக விலகளை கடைபிடிக்காமல் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனிடையே அனாவசியமாக வெளியே வரும் வாகன ஓட்டிகளை பிடித்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 

இதையடுத்து அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருபவர்களை கூட போலீசார் அவமரியாதையாக நடத்துவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கச் செல்பவர்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ளுமாறு காவல்துறையினரை டிஜிபி திரிபாதி கேட்டுக்கொண்டுள்ளார். பால், காய்கறிகள் போன்று அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்வோரிடம் தரக்குறைவாக நடக்கக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தங்கள் கீழ் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு காவல்துறை மண்டல ஐஜிக்கள் மற்றும் காவல்துறை ஆணையர்களை டிஜிபி கேட்டுக்கொண்டுள்ளார். மனித நேய மிக்கவர்கள் காவலர்கள் என்பதனையும் மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என டிஜிபி திரிபாதி அறிவுறுத்தியுள்ளார்.