anna university sexual harassment case  web
தமிழ்நாடு

’யார் அந்த சார்?’ | ’மாணவி சொன்னதாக வெளியான தகவல்கள் தவறானவை..’ - டிஜிபி அலுவலகம் விளக்கம்!

அண்ணா பலகலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அடிப்படை ஆதாரமற்ற தகவல்கள் வெளியாகி விசாரணையின் நம்பகத்தன்மையை பாதிப்பதாக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.

Rishan Vengai

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிநேக பிரியா ஐ.பி.எஸ், அய்மான் ஜமால் ஐ.பி.எஸ், பிருந்தா ஐ.பி.எஸ் ஆகிய அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அண்ணா பல்கலை. குற்றவாளிக்கு மாவுக்கட்டு

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியிடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், “சார் ஒருவரிடம் ஞானசேகரன் தொடர்பு கொண்டார். அந்த சாருடன் இருக்குமாறு அவர் என்னிடம் கூறினார்” என பாதிக்கப்பட்ட மாணவி மீண்டும் உறுதிப்படுத்தியதாக தகவல் வெளியாகின.

இந்நிலையில், இப்படி சிறப்பு புலனாய்வு குழு நடத்திய விசாரணையில் மாணவி தெரிவித்ததாக வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை என்றும், அதுபோல ஆதாரமற்ற பல செய்திகள் வெளியாகியிருப்பதாக டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது.

ஆதாரமற்ற தகவல்கள் வெளியாவது விசாரணையை பாதிக்கும்..

தவறான ஆதாரமற்ற தகவல்கள் வெளியாவது குறித்து விளக்கமளித்திருக்கும் டிஜிபி அலுவலகம், “உயர்நீதிமன்றத்தின் உத்தரவு படி, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, சென்னை அண்ணா நகர் துணை ஆணையர் புக்யா சினேஹா இகாப தலைமையில் அனைத்து மகளிர் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டது. இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு, இவ்வழக்குகளில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, சில செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் அல்லது முன்னேற்றங்கள் எனக் கூறி சில கருத்துக்களை பொதுவெளியில் ஒளிபரப்பியும் பிரசுரித்தும் வருகின்றன.

குறிப்பாக, “கைதான ஞானசேகரன் ஒரு சாரிடம் பேசியதாக சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்ததாகவும்”, சிறப்புப் புலனாய்வுக் குழுவானது, பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான ஆபாச பதிவுகள் கொண்ட மின்னணு உபகரணங்களை எதிரியிடமிருந்து பறிமுதல் செய்துள்ளதாகவும்”, “திருப்பூரை சேர்ந்த ஒரு நபரும் இதில் எதிரியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்” என்பன உள்ளிட்ட ஆதாரமற்ற தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலைக்கழகம்

இந்த சூழலில் இவ்வழக்குகளின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழுவோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ எந்த ஒரு அறிக்கையோ, கருத்தோ எந்த ஒரு தனிநபருக்கோ அல்லது ஊடகத்திற்கோ தெரிவிக்கவில்லை என்பது இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.

இவ்வழக்குகள் தொடர்பான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என பொதுவெளியில் தற்போது பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை மற்றும் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதவையாகும். சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை பற்றிய இத்தகைய ஆதாரமற்ற மற்றும் ஊகத்தின் அடிப்படையிலான தகவல்கள், பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், இவ்வழக்குகளில் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையையும் பாதிக்கக்கூடும்.

ஞானசேகரன்

இவ்வழக்குகளின் தீவிரத்தன்மை மற்றும் விசாரணையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, ஊடகங்கள், தனி நபர்கள், சமூக ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் இவ்வழக்கு விசாரணை தொடர்பாக ஊகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியிடுவதை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறான தவறான தகவல்கள், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்துவதுடன், புலன்விசாரணையின் நம்பகத்தன்மையையும் பாதிக்கக் கூடும்” என செய்தி மக்கள் தொடர்புத்துறை விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.