உச்சநீதிமன்றம் புதிதாக வெளியிட்ட நெறிமுறைகள் படி எதிர்காலத்தில் டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் நியமனம் நடைபெறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக டிஜிபிக்கு வழங்கப்பட்ட பதவி நீட்டிப்பை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர், காவல்துறை சீர்திருத்தம் குறித்த இடைக்கால தீர்ப்பை கடந்த 3-ஆம் தேதிதான் உச்ச நீதிமன்றம் வெளியிட்டதாகக் கூறினார்.
தற்போது உச்ச நீதிமன்றம் புதிதாக வெளியிட்டுள்ள நெறிமுறைகளை பின்பற்றி எதிர்காலத்தில் அதிகாரிகள் நியமனம் நடைபெறும் என முதல்வர் தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் இதற்கு முன் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில்தான் காவல்துறை உயரதிகாரிகள் நியமனம் நடைபெற்றதாகவும் முதல்வர் விளக்கம் அளித்தார். டிஜிபி நியமனத்திற்கு பட்டியல் தயாரித்து அதை மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பி ஆலோசித்த பின்பே நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் எனவே அந்நியமனம் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே நடைபெற்றுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
முன்னதாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், உச்ச நீதிமன்றத்தின் அண்மை தீர்ப்பு அடிப்படையில் டிஜிபி ராஜேந்திரனின் பதவி நீட்டிப்பை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். சட்டம் ஒழுங்கை கவனிக்கும் காவல்துறை தலைவர் பதவிகளில் நீட்டிப்போ அல்லது பொறுப்பு பணியோ வழங்கக் கூடாது என தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருந்ததை ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.