தமிழ்நாடு

எப்போது ஓயும் இந்த ’முதல் மரியாதை’ பிரச்னை! உசிலம்பட்டியில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவம்!

webteam

திருவிழாக்களே நமது கலாச்சாரம்:

கோயில்களை மையப்படுத்தியே தமிழர்களின் திருவிழாக்கள் அமைந்துள்ளன. திருவிழாக்கள் என்பது ஒருவிதமான சமூகவியல் நிகழ்வு. மக்கள் ஓரிடத்தில் ஓன்று கூடி மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்கிக் கொள்ளும் கலாச்சார நடவடிக்கை. பல திருவிழாக்களில் மதம் கடந்து, சாதி கடந்து எல்லா தரப்பினும் ஒன்றுகூடுகிறார்கள். அப்படியான நிகழ்வுகள் தமிழகத்தின் தனிச்சிறப்பான அம்சங்களுள் ஒன்று. ஆனால், இப்படியான கலாச்சார நடவடிக்கையில் இன்னும் நம்முடைய பழைமையான எண்ணங்களும் குறுகிய மனப்பான்மையும் எதற்காக திருவிழாக்கள் நடத்தப்படுகின்றதோ அதனை தன்மையை சீர்குலைய வைத்துவிடுகிறது. அப்படியான ஒரு நிகழ்வுதான் இன்று உசிலம்பட்டி அருகே உள்ள கோயில் ஒன்றில் நிகழ்ந்துள்ளது. யாருக்கு முதல் மரியாதை என்பதில் நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்னை இன்று பெரிய அளவிலான அடிதடியில் முடிந்திருக்கிறது. 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள ஈஸ்வரி திருக்கோயில். இந்த கோயிலின் குடமுழுக்கு விழா கடந்த மாதம் 10 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று இக்கோவிலின் 48வது நாள் பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த கோயிலுக்கு பாத்தியப்பட்ட வகையறாக்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பால் குடம் எடுத்தும் முளைப்பாரி எடுத்தும் ஊர்வலமாக வந்து கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

யாருக்கு முதல் மரியாதை என்பதில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஒருவரை ஒருவர் கம்புகளைக்கொண்டு சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால், அந்த கோயில் வளாகமே கலவர பூமியாக மாறியது. இதில் பலரது மண்டை உடைந்தது. பலர் ரத்த காயத்துடன் சரிந்து வீழ்ந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் மேனகா உள்ளிட்ட வாலாந்தூரைச் சேர்ந்த மலர்விழி, பாண்டி, சங்கிலி, பாண்டி, வீர ராகவன், கல்யாணி உள்ளிட்ட ஆறு பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவருக்கும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் உடனடியாக தீயாய் பரவியது. நீண்ட நேரம் கழித்து போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இவ்வளவு கலவரச் சூழலுக்கு பிறகு மீண்டும் எல்லோரும் ஒன்று கூடி முளைப்பாரி எடுத்து திருவிழாவை முடித்துவிட்டார்கள். இருதரப்பிலும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

திருவிழாக்கள் என்பது ஒன்றுகூடி மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்பதற்கு பதிலாக நம்முடைய சில குணங்களால் அசம்பாவிதங்கள் நிகழ்வது அனைத்தையும் மாற்றிவிடுகிறது.