தமிழ்நாடு

”2001ல் 59.07% முதல் 2021ல் 72.78% வரை”- 20 ஆண்டுகளில் வாக்குப்பதிவும் ஆட்சி மாற்றங்களும்!

Sinekadhara

தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் பதிவான வாக்குப்பதிவு விவரங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.

தமிழகத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை இருபது ஆண்டுகளில் 4 சட்டமன்ற தேர்தல்கள் நடந்திருக்கின்றன. இதில் 2001ஆம் ஆண்டு மிக குறைந்த அளவு வாக்குகளே பதிவாகின. அதாவது  59.07 சதவிகித வாக்குப்பதிவுதான் நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்தது. அடுத்ததாக 2006ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 70.82 சதவிகித வாக்குகள் பதிவாகின. அப்போது அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்து மீண்டும் திமுக ஆட்சி அமைந்தது.

2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 78.01 சதவிகிதம் என்ற அளவில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழக சட்டமன்ற தேர்தலில் இதுவரை பதிவான அதிகபட்ச வாக்குப்பதிவு இது. இந்த தேர்தலில் திமுக ஆட்சியை இழந்தது. அதிமுக ஆட்சியை கைப்பற்றியது. 2016ஆம் ஆண்டு 74.24 சதவிகித வாக்குகளே பதிவாகின. அப்போது மீண்டும் அதிமுகவே ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் அதிமுக - திமுக இடையிலான வாக்கு சதவிகித வித்தியாசம் 1 சதவிகிதம் என்ற மிக குறைந்த அளவிலேயே இருந்தது.

இந்த நிலையில் தற்போது நடந்த தேர்தலில் 72.78 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் மிக குறைந்த வாக்குப்பதிவு நிகழ்ந்த 2001ஆம் ஆண்டு ஆகட்டும் அதிகபட்ச வாக்குப்பதிவான 2011ஆம் ஆண்டு தேர்தல் ஆகட்டும் இரண்டிலுமே திமுக ஆட்சியை இழந்து அதிமுக ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. இந்த தேர்தலில் சராசரியான வாக்குகளே பதிவாகியுள்ளன, இது ஆட்சி மாற்றத்துக்கு வித்திடுமா அல்லது மீண்டும் அதிமுக ஆட்சியே அமையுமா என்பது மே 2 ஆம் தேதி தெரியவரும்.