கொரோனா பாதிக்கப்பட்டவரின் செல்போன் எண் உள்ளிட்ட தகவல்கள் வாட்ஸ் அப் குரூப்களில் பரவியதால் அவர் பல தேவையில்லாத
அழைப்புகளால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்
நாம் கொரோனாவுக்கு எதிராகத்தான் போராட வேண்டுமே தவிர கொரோனா பாதித்தவர்களுக்கு எதிராக அல்ல என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் சிலரது கவனக்குறைவு கொரோனா பாதித்தவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி விடுகிறது. இந்நிலையில் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா பாதிக்கப்பட்டவரின் தொலைப்பேசி எண் உள்ளிட்ட தகவல்கள் வாட்ஸ் அப் குரூப்களில் பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்து போன் அழைப்புகள் வந்ததால் குறிப்பிட்ட நபர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். சென்னையில் இருந்து ஜூன் 2 ம்தேதி திருவாரூர் சென்ற நபரை போலீசார் வழிமறித்து தனிமைப்படுத்தி கொரொனா பரிசோதனையும் மேற்கொண்டுள்ளனர். பின்னர் அவர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது செல்பொன் எண்ணிற்கு தொடர்ந்து அழைப்புகள் வந்துள்ளன. அதில் பேசுபவர்கள் உங்கள் நம்பரை வாட்ஸ் அப் குரூப்பில் பார்த்தோம் என விசாரித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட நபர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அரசு எடுத்த தகவல்கள் வாட்ஸ் அப் குரூப்களுக்கு சென்றது எப்படி என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ள ஒருவர், ''கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டவரின் கைப்பேசி எண் முதற்கொண்டு பொது வெளியில் அறிவிக்கப்படுகிறது. அகவுரிமை (#Privacy) என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை. பெயர், முகவரியை தாண்டி கைப்பேசி எண்ணை வெளியிடுவதன் அவசியம் தான் என்ன? என பதிவிட்டுள்ளார்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் எங்கிருந்து பரவுகிறது என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென
கோரிக்கை எழுந்துள்ளது