குழந்தையை உயிருடன் மீட்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.
திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் 2 வயது குழந்தை சுர்ஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது. குழந்தையை மீட்கும் பணிகள் அன்று மாலை முதலே தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரையிலும் குழந்தையை மீட்க முடியவில்லை. பல்வேறு மீட்புக்குழுவினர் முயற்சித்தும் முடியவில்லை. இதற்கிடையே குழந்தை 26 அடியில் சிக்கியிருந்த குழந்தை, 88 அடிக்கு கீழே இறங்கியுள்ளது. சுர்ஜித்திற்காக தமிழகம் முழுவதும் பலரும் பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடுக்காட்டிப்பட்டியில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட வந்தார். துணை முதலமைச்சருடன் அவரது மகனும் தேனி மக்களவைத் தொகுதி எம்பியுமான ஓ.பி.ரவீந்தரநாத் குமார் வந்தார். துணை முதலமைச்சருக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீட்புப் பணிகள் குறித்த விளக்கத்தை அளித்தனர். அத்துடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குழந்தையின் பெற்றொருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,“குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த ஒருமணி நேரத்திற்குள் மீட்புப் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. முதலில் ஆழ் துளை கிணற்றுக்குள் சில இயந்திரங்களை வைத்து மீட்க முயற்சி செய்தோம். அதில் தோல்வி அடைந்ததை அடுத்து ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் துளையிடுவது என்று திட்டமிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதலில் ஒரு ரிக் இயந்திரம் துளையிட்டது. பாறைகள் அதிகம் இருந்ததால் ரிக் இயந்திரத்தில் தொய்வு ஏற்பட்டது.
இதனையடுத்து அதிநவீன இயந்திரம் இராமநாதபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. இந்த இயந்திரம் தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த இயந்திரம் ஒரு மணிநேரத்திற்கு 10அடி துளைப் போடும் திறனை கொண்டது. இதுவரை 35 அடி துளை போடப்பட்டுள்ளது. இன்னும் 45 அடி துளை போடவேண்டும். இந்தப் பகுதியில் கடினமான பாறைகள் இருப்பதால் துளையிடும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் இன்னும் நான்கு அல்லது ஐந்து மணி நேரங்களுக்குள் மீட்புப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள பயன்படாத ஆழ்துளை கிணறுகள் உடனடியாக மூடப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.