தமிழ்நாடு

ஸ்டாலின் தேவையற்ற சர்ச்சையைக் கிளப்புகிறார் : ஓபிஎஸ்

ஸ்டாலின் தேவையற்ற சர்ச்சையைக் கிளப்புகிறார் : ஓபிஎஸ்

webteam

கொரோனா விவகாரத்தில் தேவையற்ற சர்ச்சையை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்துவதாகத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

நிதிப் பகிர்வில் தமிழக அரசு தனது உரிமையை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். அதில், நிதிக்குழு தமிழ்நாட்டிற்கு பரிந்துரைக்ககூடிய நிதியானது 4.023 சதவீதத்திலிருந்து, 4.189 சதவீதமாக உயர்த்தி பரிந்துரை செய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். 74,340 கோடியை நிதிக்குழு பரிந்துரைத்துள்ள நிலையில், மத்திய அரசின் வரவு செலவுத்திட்டத்தில் இம்மானியத்திற்காக 30 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் போதிய நிதி ஒதுக்கீடு இல்லை என்றால் கூடுதல் தொகை துணை மானியக் கோரிக்கைகளின் மூலமாகவும், திருத்திய வரவுசெலவு மதிப்பீடுகளின் மூலமாகவும் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். நிதிநிலை அறிக்கையில் ஏற்கனவே குறிப்பிட்டவாறு வருவாய் பற்றாக்குறை மானியமாகத் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய முழு தொகையையும் இந்தாண்டு இறுதிக்குள் அதிமுக அரசு பெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவை தடுக்க நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தேவையற்ற, ஏற்கனவே விளக்கமளிக்கப்பட்ட விஷயங்களை மு.க.ஸ்டாலின் பேசி வருவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.