எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் போல நீலகிரிக்கு போஸ் கொடுக்க வரவில்லை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
நீலகிரியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்றுள்ளார். அங்கு பேசிய அவர், “மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்துள்ளேன். ஸ்டாலின் போன்று போஸ் கொடுக்க வரவில்லை. துரித நடவடிக்கை தேவை என எதிர்க்கட்சித் தலைவர் பேச வேண்டும். பொறுப்பற்ற முறையில் பேசக் கூடாது. நீலகிரி மாவட்டத்தில் விளை நிலங்களில் பாதிப்புகளை சரி செய்ய ரூ.4.37 கோடி ஒதுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நீலகிரியில் மழை மற்றும் வெள்ளத்தால் ரூ.199.21 கோடி அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மத்தியக் குழுவை அனுப்பி நீலகிரியில் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். முற்றிலும் சேதமடைந்த வீடுகளுக்கு பதில் மாற்று வீடுகள் கட்டித் தரப்படும். கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 1,350 வீடுகள் சேதமடைந்துள்ளன” என்று தெரிவித்தார்.