தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால், காலியாகவுள்ள 2,500 உதவி மருத்துவ அதிகாரி பணியிடங்களையும் விரைந்து நிரப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகரைச் சேர்ந்த சகாய பனிமலர் என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில், எவ்வித நடைமுறைகளும் பின்பற்றாமல் நேரடியாக உதவி மருத்துவ அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். காலியாக இருந்த 1,223 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக 2016ஆம் ஆண்டு அறிவிக்கை வெளியிடப்பட்டு, தேர்வு அடிப்படையில் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. அதே தேர்வு அடிப்படையில், இந்தாண்டு ஜூலை 5ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை சான்றிதழ் சரிப்பார்ப்பு நடைபெற்று 2,500 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் அந்த நடைமுறைகள் பின்பற்றப்படாததால் தன்னை போல் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக சகாய பனிமலர் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில் இன்று வெளியிடப்பட்ட தீர்ப்பில், தமிழகத்தில் டெங்கு பாதிப்பு, உயிரிழப்பு அதிகரித்துள்ளதால் உதவி மருத்துவ அதிகாரி பணியிடங்களை 2016ஆம் ஆண்டின் அறிவிக்கை அடிப்படையிலேயே நிரப்ப உத்தரவிடப்பட்டது.