தமிழ்நாடு

தமிழகத்தில் டெங்கு பீதி: இன்று மட்டும் 7 பேர் பலி

தமிழகத்தில் டெங்கு பீதி: இன்று மட்டும் 7 பேர் பலி

webteam

தமிழகத்தில் இன்று மட்டும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் 7 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் இதற்கு பலர் பலியாகியுள்ளனர். நேற்று மட்டும் 15 பேர் பலியாயினர். தொடர்ந்து பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகேயுள்ள நல்லியாம்பாளையத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவர் ஹரினிஷ் காய்ச்சலுக்கு உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 5 வயது சிறுமி பைரவி டெங்கு காய்‌ச்சலால் இன்று காலை உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள கூட்டூரைச் சேர்ந்த 5வயது சிறுவன் வினோத்குமார் காய்ச்சலாலும், மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த காயத்ரி வைரஸ் காய்ச்சலாலும் இன்று காலை உயிரிழந்தனர்.

சேலம் ஆலமரத்துக்காடு கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் நந்தகுமார், ஓரத்தூர்,  செம்பியன் கிளரியைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார், உசிலம்பட்டி அருகே சிறுவன் கபிலன் ஆகியோரும் இன்று உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து மத்திய குழுவினர் இன்று இரண்டாவது நாளாக ஆய்வு செய்கிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் ஒரு குழுவும் சேலத்தில் ஒரு குழுவும் ஆய்வு நடத்த உள்ளன. முன்னதாக அவர்கள் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் நேற்று ஆய்வு செய்தனர்.