தமிழ்நாடு

தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பு

கலிலுல்லா

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. எனினும், தமிழகத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு 2,410 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 19 ஆம்தேதி வரை 2,657 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வட கிழக்கு பருவ மழை அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ள நிலையில், தற்போதே டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், காய்ச்சல், தலையின் பின்பகுதியில் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனையை நாட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.டெங்கு கொசுக்கள் நல்ல தண்ணீரில் பெருகும் என்பதால் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

தற்போது மாநிலத்தில் ஒரு நாளுக்கு சராசரியாக 25 முதல் 30 பேருக்கு டெங்கு கண்டறியப்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கம் கோட்டையைச் சேர்ந்த 4 வயது சிறுமி, டெங்குவால் பாதிக்கப்பட்டநிலையில், சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஜனவரி முதல் 354 குழந்தைகள் டெங்குவுக்கு சிகிச்சை பெற்றனர். தற்போது பத்து குழந்தைகள் வரை சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

தமிழகத்தில் எந்த இடத்திலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக டெங்கு பாதிப்பு திடீரென அதிகரிக்கவில்லை என்றாலும், 22,500 கொசு ஒழிப்பு பணியாளர்கள் களத்தில் இருப்பதாகவும் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாகவும் பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.