தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரை டெங்கு காய்ச்சலுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் கொசு ஒழிப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளக் கோரி ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றக் மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அதில், கொசுவால் ஏற்படும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தனி வார்டு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் விவரம் குறித்து மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரை டெங்கு காய்ச்சலுக்கு 15 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. டெங்குவை தவிர பிற மர்ம காய்ச்சலுக்கு 32 பேர் உயிரிழந்ததாகவும், சிக்குன்குனியாவில் தமிழகத்தில் உயிரிழப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. டெங்குவை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் இதுவரை 13,840 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டதாகவும், 770 நடமாடும் சுகாதார மையங்கள் செயல்படுவதாகவும் கூறப்பட்டது. டெங்கு பரிசோதனை மையம் 30-லிருந்து 90 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொசுவை முற்றிலும் ஒழிப்பது என்பது இயலாத காரியம் என்று கூறியுள்ள தமிழக அரசு கொசு ஒழிப்புக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என தெரிவித்தது. தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் இந்த பதில் மனுவை தாக்கல் செய்தார். தமிழக அரசின் பதில் மனு தாக்கலையடுத்து வழக்கு செப்டம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.