தமிழ்நாடு

11,000 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு: சுகாதாரத்துறை தகவல்

webteam

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெங்கு காய்ச்சலால் இதுவரை 28 பேர் இறந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

டெங்கு காய்ச்சல் தமிழகம் எங்கும் வேகமாக பரவி வருகிறது. அதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் டெங்கு குறித்தான புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் டெங்கு காய்ச்சலால் சுமார் 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தினசரி சுமார் 60 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். டெங்கு தவிர மற்ற வகை காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு 12 ஆயிரம் பேர் உள்நோயாளிகளாகவும் 11 ஆயிரம் பேர் வெளிநோயாளிகளாகவும் சிகிச்சை பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே நாகை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். நாகை, மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம் அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 213 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்நிலையில் தமிழகத்தில் வியாழன் தோறும் டெங்கு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி சென்னை ஆவடியில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அமைச்சர், வீடுகள் அருகே தண்ணீர் மற்றும் மழைநீர் தேங்க விடக்கூடாது என்றும் பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே டெங்குவை முழுமையாக ஒழிக்க முடியும் எனவும் கூறினார்.