ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்றிரவு முதல் மழை அதிகரிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், “வட கடலோர மாவட்டங்களில் இன்று இரவு முதல் மழைப்பொழிவு படிப்படியாக அதிகரிக்கும். குறிப்பாக, வட கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட இடங்களில் நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் பரவலாக கனமழை பதிவாகும். ஒரு சில இடங்களில் மிக கனமழையையும் எதிர்ப்பார்க்கலாம்.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பது, தற்போது வட இலங்கை, அதை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. சில மணி நேரங்கள் நகராமலும், சில மணி நேரம் மெதுவாக இரண்டு மூன்று கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்தும் உள்ளது. இது நாளை காலை வரை ஒரே இடத்தில் மையம் கொள்ளும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதன்விளைவாக, கடல் சீற்றமும், கடல் கொந்தளிப்பும் அதிகமாக இருக்கும். அதேபோல வட கடலோர மாவட்டங்களில் தரைக்காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும். 20- 30 கி.மீ வேகத்தில் தரைக்காற்று இன்று வீசும். இந்த தரைக்காற்று நாளைய தினம் வடக்கு திசையில் இருந்து 30 - 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்..” என்று தெரிவித்துள்ளார்.