தமிழ்நாடு

“நாங்கள் உணவு கொடுக்கிறவர்கள்” இக்கட்டான சூழ்நிலையிலும் நிரூபித்த டெல்டா விவசாயிகள்..!

“நாங்கள் உணவு கொடுக்கிறவர்கள்” இக்கட்டான சூழ்நிலையிலும் நிரூபித்த டெல்டா விவசாயிகள்..!

Rasus

உதவிக்கரம் நீட்டிய திருச்சி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வெறும் வண்டியை திருப்பி அனுப்ப மனமில்லாமல் அதே வண்டியில் இளநீர் அனுப்பி வைத்துள்ளனர் டெல்டா விவசாயிகள்.

மக்களுக்கு சோறு போட்ட விவசாயிகள் இன்று ஒரு வாய் சோற்றுக்காக தவித்து வருகின்றனர். காரணம் கஜா புயல். தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் என மாவட்டத்தின் பல பகுதிகளை இருந்த இடம் தெரியாமல் உருக்குலைத்து போட்டுள்ளது கஜா புயல். தென்னை, வாழை என ஏகப்பட்ட மரங்கள் புயல் காற்றில் முறிந்து விழுந்துள்ளன. ஆடு, மாடுகள் மடிந்து கிடக்கின்றன. அதை புகைப்படங்களில் காணும் நமக்கே ஒரு நிமிடம் கண்ணீர் வருகிறது. அப்படியிருக்க அதையே வாழ்வாதாரமாக நம்பி வாழ்ந்தவர்களின் நிலையை சொல்லித்தான் தெரிய வேண்டுமா..?

உருக்குலைந்துள்ள பகுதிகளை சீரமைக்கும் பணிகளில் அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. நல் உள்ளம் படைத்தவர்கள் தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். சிலர் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு மக்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து வருகின்றனர். அப்படித்தான் திருச்சி கல்லூரி மாணவ மாணவிகள் தங்களால் முயன்ற உதவிகளை லாரி மூலம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதற்கு அந்த லாரியை வெறும் வண்டியாக திருப்பி அனுப்ப மனமில்லாத டெல்டா விவசாயிகள் அதே வண்டி முழுவதும் இளநீர் கொடுத்து அனுப்பியுள்ளனர். இக்கட்டான சூழ்நிலையிலும் நாங்கள் உணவு போடும் விவசாயிகள் என்பதை அவர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.