டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், வீடியோ மூலம் இரு தினம் முன்பாக செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா பாதித்தவர்களை அனுமதிப்பது குறித்து அவர் உரையாற்றினார். டெல்லி மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் கொரோனா பாதிக்கப்படும் டெல்லிவாசிக்களுக்கு ஒதுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டார். இதனிடையே கடந்த இரு தினம் முன்பாக கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை சரியில்லை எனத் தகவல் வெளியானது. இரு தினங்களாக அவர் அதிகாரிகள் யாரையும் சந்திக்கவில்லை எனவும் கூறப்பட்டது. இது குறித்து வெளியான தகவலின்படி, அவருக்கு லேசான காய்ச்சலும், தொண்டை வலியும் இருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், இன்று அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே கெஜ்ரிவால் விரைவாகக் குணமடைய வேண்டுமெனப் பிரார்த்திப்பதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் ட்விட்டரில் பதிவிட்டனர்.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. எடுக்கப்பட்ட சோதனையில் அவருக்கு நெகடிவ் என வந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.