தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : தாமதமாகும் அருணா ஜெகதீசன் விசாரணை

webteam

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தது குறித்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணையை விரைவு படுத்த வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து விசாரிக்க தமிழக அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை அமைத்தது. 

விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு வரும் மாதத்தோடு ஒரு வருடம் நிறைவடையவுள்ள நிலையில், இன்னும் பாதிக்கப்பட்ட தரப்பு, கைதானவர்கள் தரப்பையே முழுமையாக விசாரிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர்களை விசாரித்து முடித்த பிறகே காவல்துறை தரப்பை ஆணையம் விசாரிக்க இருக்கிறது.

ஏற்கனவே ஆணையத்திற்கு மூன்று மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர் ஆறு மாதங்கள் நீட்டிக்கப்பட்டு கடந்த பிப்ரவரியோடு அந்த ஆறு மாதங்களும் நிறைவடைந்த நிலையில், மீண்டும் வரும் ஆகஸ்டு 4ஆம் தேதி வரை ஆணையத்திற்கான கால கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்னும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பையே முழுமையாக விசாரித்து முடிக்காததால் வரும் ஆகஸ்டுக்குள் விசாரணையை முடித்து அருணா ஜெகதீசன் அறிக்கையை தாக்கல் செய்வாரா என்பது சந்தேகமே என கூறப்படுகிறது. விசாரணையை விரைவில் முடித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிற்கு உரிய நீதியை வழங்க அருணா ஜெகதீசன் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளனர்