நாகையில் தரைதட்டி நிற்கும் கப்பலை மீட்பதற்கு மீட்பு படகுகள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் கோடியக்கரை துறைமுகத்திற்கு அருகில் தரைதட்டி நிற்கும் சிறிய ரக கப்பலை மீட்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. சென்னையிலிருந்து மண்டபம் நோக்கி சென்ற இந்த சிறிய ரக கப்பல் கடந்த 25ஆம் தேதி கோடியக்கரை துறைமுகம் அருகே தரைதட்டி நின்றது. மும்பையைச் சேர்ந்த எம்.வி.என்ரிச் செரியா என்ற அந்த கப்பல், மண்டபம் முதல் விசாகப்பட்டினம் வரையுள்ள துறைமுகப் பகுதிகளை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தது. அப்போது ஏற்பட்ட பழுதை சரி செய்வதற்காக சென்னை வந்த கப்பல், மீண்டும் மண்டபம் நோக்கி சென்றபோது காற்றில் சிக்கி தரைதட்டியது.
மூன்றாவது நாளான இன்று கப்பலை மீட்பதற்காக நாகையிலிருந்து 2 விசைப்படகுகள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நண்பகலுக்கு பின்பு கப்பலை மீட்பதற்கான பணிகள் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தரைதட்டி நிற்கும் கப்பலில் 9 பணியாளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.