அயோத்தி வழக்கு தீர்ப்பில் தமிழகத்தின் சிதம்பரம் கோயிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அயோத்தி நிலபரப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் 2.77 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டதோடு, இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் மத்திய, உத்தரப் பிரதேச மாநில அரசுகள் 5 ஏக்கர் இடத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் 2.77 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்டுவதற்கு அமைப்பை 3 மாதத்திற்குள் ஏற்படுத்த வேண்டும் என்றும், நிலத்தை மத்திய அரசே நிர்வகிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
ஒரு இடத்தில் கடவுளின் சிலை இல்லாமல் ஆனால் அந்த இடத்தில் கடவுள் இருப்பதாக பக்தர்கள் நம்புவதற்கு உதாரணமாக சிதம்பரம் கோயில் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். வழக்கு விசாரணையின்போது, ராம் லல்லா அமைப்பு சார்பில் ஆஜரான தமிழக வழக்கறிஞரான சி.எஸ்.வைத்தியநாதன் இந்த வாதத்தை முன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.