தமிழ்நாடு

சுட்டுக் கொல்லப்பட்ட வில்சன் குறித்து அவதூறு கருத்துப் பதிவிட்டதாக ஒருவர் கைது

சுட்டுக் கொல்லப்பட்ட வில்சன் குறித்து அவதூறு கருத்துப் பதிவிட்டதாக ஒருவர் கைது

Rasus

கன்னியாகுமரியில் சுட்டுக் கொல்லப்ப‌ட்ட எஸ்.எஸ்.ஐ. வில்சன் குறித்து, அவதூறு கருத்துப் பதிவிட்டதாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் பாதுகாப்புப் பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ. வில்சன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் தவுஃபீக், அப்துல் சமீம் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தங்கள் அமைப்பை சேர்ந்தவர்களை காவல்துறையினர் தொடர்ந்து கைது செய்ததால், பழிதீர்ப்பதற்காக எஸ்.எஸ்.ஐ. வில்சனை சுட்டுக் கொன்றதாக அவர்கள் இருவரும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், அப்துல் சமீம் மீது தீவிரவாதி என எஸ்.எஸ்.ஐ. வில்சன் பொய் வழக்குப்பதிவு செய்ததாகவும், அதனால் சமீம் தீவிரவாதியாக மாறியதாகவும் நவாஸ் ஷாகுல் என்பவர் ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டார். இதையடுத்து, தேங்காய்பட்டிணத்தை சேர்ந்த நவாஸ் ஷாகுலை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு தங்க இடம் கொடுத்ததாக, பெங்களூருவைச் சேர்ந்த ஹுசைன் ஷெரிப் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளன‌ர். இது ஒருபுறம் இருக்க, காஞ்சிபுரத்தில் போலி முகவரிகள் மூலம் 200 சிம்கார்டுகள் விற்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதில், இரண்டு சிம்கார்டுகளை வில்சன் கொலை வழக்கில் கைதானவர்கள் பயன்படுத்தினார்களா என தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர்.