அருப்புக்கோட்டை அருகே தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் தெரு நாய்கள் கடித்து உயிரிழந்தது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் பந்தல்குடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமுதாய வனக்காடுகள் உள்ளன. இங்கு மான்கள், முயல்கள், காட்டு பன்றி மற்றும் கீரிப்பிள்ளை போன்ற காட்டு விலங்குகள் அதிகளவு வாழ்ந்து வருகின்றன. அப்பகுதியில் போதி மழை இல்லாததால் நீர் நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன. இதனால் காட்டுப் பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டு, விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள் வருகின்றன. அவ்வாறு வரும் போது ஒரு சில சமயங்களில் நாய்கள் தாக்கியும், வாகனங்களில் அடிபட்டும் அவை இறந்து விடுகின்றன.
இந்நிலையில் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆமனக்குநத்தம் கிராமத்தில் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த 4 வயது மதிக்கதக்க ஆண் புள்ளிமானை தெருநாய்கள் கடித்து குதறியது. கால்பகுதி, வாய் மற்றும் பின்பகுதிகளில் படுகாயம் அடைந்த மான், கனகராஜ் என்பவரின் தோட்டத்தில் புகுந்தது. இதையடுத்து புள்ளிமானை மீட்ட பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
வனத்துறையினர் வந்து பார்த்த போது புள்ளிமான் படுகாயமடைந்திருந்ததால், உடனடியாக கால்நடை மருத்துவரை வரவழைத்து புள்ளிமானுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் படுகாயமடைந்த புள்ளிமான் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. பின்னர் உயிரழந்த புள்ளிமானை காட்டுப் பகுதியில் குழி தோண்டி வனத்துறையினர் அடக்கம் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மான்கள் நீரின்றி ஊருக்குள் வருவதும், நாய்கள் கடித்து இறப்பதும் தொடர்கதையாகி வருகிறது.