சுயாதீன வானிலை ஆய்வாளர்கள் ஹேமசந்திரன் மற்றும் பிரதீப் ஜான், தமிழ்நாட்டில் நிலவும் வானிலை தொடர்பாக கொடுத்த தகவல்களை இங்கே அறியலாம்...
“தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (26/11/2024) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதுவும் வலுப்பெற்றுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், காலை முதல் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இப்புயல் சின்னம் தற்போதைய நிலவரப்படி நாகப்பட்டினத்திற்கு தெற்கே - தென்கிழக்கே 600 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கே - தென்கிழக்கே 720 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கே - தென்கிழக்கே 800 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இப்புயல் சின்னம் நாளை புயலாக மாறுவதற்கு சாதக சூழல் காணப்பட்டு வருகிறது. இதற்கு ‘ஃபெங்கல்’ (Fengal) என பெயரிடப்பட்டுள்ளது.
வரக்கூடிய அடுத்த இரண்டு மணி நேரத்தில் மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை பதிவாகும்.
கடலூர் புதுச்சேரி தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் விட்டு விட்டு கனமழை பதிவாகும்.
சென்னை, கடலூர் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் இன்று முற்பகல் 11 மணி அளவில் தொடங்கி விட்டு விட்டு மழை பதிவாகும்” என்று கூறுகிறார்.
அடுத்ததாக புயல் குறித்து சுயாதீன வானிலை ஆய்வாளரான ப்ரதீப் ஜான் சொன்னது என்ன என்பதைப் பார்க்கலாம்.
“சென்னையைப் பொருத்தவரை இன்றிலிருந்து மழை தொடங்கி அடுத்த 4 - 5 நாட்களுக்கு மழை இருக்கும். டெல்டா பகுதிகளான நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சை மற்றும் ராமநாதபுரத்தின் சில பகுதிகளான கடலூர், பாண்டிச்சேரியிலும் கனமழை பெய்யும்” என்கிறார்.
மேலும், “சென்னையில் வரும் 27-ம் தேதி தொடங்கி டிசம்பர் 1-ம் தேதி வரை மழை இருக்கும். காற்றழுத்த தாழ்வு நிலை சென்னைக்குக் கீழே கரையைக் கடக்கும் போது மழை பெய்யும். எனவே ஒருசில நாட்களில் கனமழை முதல் மிகக் கனமழையை எதிர்பார்க்கலாம்
பூண்டியில் 15%, செம்பாவில் 59% மற்றும் ரெட்ஹில்ஸில் 71% மழை பெய்ய வேண்டும். 2025ல் சென்னைக்கு தண்ணீர் பிரச்சனை வருமா என்றால். இல்லை என்பதே பதில். இந்த மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கிறேன்.
கோவை மற்றும் உட்புறப் பகுதியை பொருத்தவரை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பது வெகு தொலைவில் உள்ளது, காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து தமிழகத்தை நோக்கி நகர்ந்தவுடன் உட்புறம் மழைக்கான வாய்ப்பு உள்ளது.
இந்த மழையானது 4 முதல் 5 நாட்கள் வரை நீடிக்குமாதலால் கடல் தொடர்ந்து சீற்றமாக இருக்கும். ஆகையால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம்” என்று கூறியுள்ளார்.