7 நகராட்சிகள் pt
தமிழ்நாடு

தமிழகத்தில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்த முடிவு - அறிவிப்பு வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

இது குறித்த தகவல்களை பார்க்கலாம்.

ஜெனிட்டா ரோஸ்லின்

மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் எல்லைகளை சுற்றி அமைந்துள்ள பெரும்பாலான ஊரக பகுதிகள் நகர்ப்புற பகுதிகளுக்கு இணையாக வளர்த்து வருகின்றன.

எனவே, மாநிலத்தின் மிக வேகமான நகரமயமாக்கலை கருத்திற்கொண்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைத்து வருகிறது தமிழ்நாடு அரசு. இதன்மூலமே, அரசின் திட்டங்களையும், மக்களின் தேவையும் நிவர்த்தி செய்ய முடியும். அதன்படி, தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து சட்டசபையில், பேசியிருந்த அமைச்சர் கே.என்.நேரு தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளை அதிகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த நடவடிக்கைகள் முடிவடையும் போது 25 மாநகராட்சிகள், 146 நகராட்சிகள், 491 பேரூராட்சிகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

அந்தவகையில், தமிழ்நாட்டில் 7 புதிய நகராட்சிகளை உருவாக்கியுள்ள தமிழ்நாடு அரசு, அதற்கான அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டுள்ளது.

அதன்படி போளூர், செங்கம், கன்னியாகுமரி, சங்ககிரி ஆகியவையும், கோத்தகிரி, அவிநாசி மற்றும் பெருந்துறை ஆகியவையும், நகராட்சிகளாக உதயமாகியுள்ளன. பல்வேறு பரிந்துரைகளையும், ஆட்சேபனைகளையும் ஆராய்ந்து, நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.