தமிழ்நாடு

நீட் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவு ஏற்கத்தக்கல்ல: உயர்நீதிமன்றம்

நீட் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவு ஏற்கத்தக்கல்ல: உயர்நீதிமன்றம்

webteam

நீட் விவகாரத்தில் விலக்களிக்க முடியாது என மத்திய அரசு கடைசி நேரத்தில் கூறியது ஏற்கத்தக்கதல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், 10 ஆண்டுகளில் தமிழக அரசு செய்த தவறால் மாணவர்கள் 9 சதவிகிதம் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். நீட் விவகாரத்தில் விலக்களிக்க முடியாது என மத்திய அரசு கடைசி நேரத்தில் கூறியது ஏற்கத்தக்கதல்ல” என்று கூறியுள்ளார். 199.25 கட்-ஆப் மதிப்பெண் பெற்ற கிருத்திகா தொடர்ந்த வழக்கில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
எனினும், மருத்துவ கலந்தாய்வை நீட் தேர்வின் அடிப்படையில்தான் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், மாணவி கிருத்திகா தொடர்ந்த இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி கிருபாகரன்.

இதே வழக்கில் நேற்று கருத்து தெரிவித்த நீதிபதி கிருபாகரன், தேர்வு எழுதியவர்களில் 5 சதவிகிதம் பேர் மட்டுமே சி.பி.எஸ்.இ. மாணவர்கள் என்று சொன்ன நிலையில், மாணவர் சேர்க்கையில் எப்படி அவர்கள் 50 சதவிகித இடத்தை பெறுகிறார்கள் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இன்று வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் எந்தெந்த பாடத்திட்டத்தில் படித்தவர்களில் எத்தனை மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் என்பதை விளக்கமாக தெரிவிக்கும்படியும் தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.

சி.பி.எஸ்.இ பாடத்திட்ட கேள்விகளை மாநில பாடதிட்ட மாணவர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்? என அவர் கேள்வி எழுப்பினார். 10 ஆண்டுகளாக பாடத்திட்டத்தை மாற்றாதது ஏன்? என்றும் கற்பிக்கும் முறையை மாற்றாதது ஏன்? என்றும் நீதிபதி கிருபாகரன் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பினார். மேலும், இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், நீட் தேர்வுக்கு வினாத்தாள் தயார் செய்யும் பணியை சிபிஎஸ்இ இடம் ஒப்படைக்காமல் ஒரு பொதுவான அமைப்பின் மூலம் செய்திருக்க வேண்டும் என்றார்.