தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரையில் அரசின் கொள்கை என்னவென்றே தெரியவில்லை எனக் கூறினார். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரணம் சரியாக சென்றடையவில்லை எனக் குற்றம்சாட்டிய ஸ்டாலின், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் நீர்ப்பூத்த நெருப்பாக இருக்கிறது என்றார். தட்டிக்கேட்க வேண்டிய இடத்தில் தட்டிக் கேட்க வேண்டும் என்று பேசிய ஸ்டாலின், மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்தார்.
மத்திய அரசை மாநில அரசு ஒவ்வொரு பிரச்னையிலும் முறையிடுவது என்பது, போர்முரசு கொட்டும்போது, புல்லாங்குழல் வாசிப்பது போல் உள்ளது என ஸ்டாலின் விமர்சித்தார். அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து பிரச்னைகளிலும், மாநில அரசு தீவிரமான நடவடிக்கை எடுத்து வருவதாக பதில் அளித்தார். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி, அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் குரல் கொடுத்து வருவதாக முதலமைச்சர் கூறினார். ஆட்சியில் இருந்தபோது, காவிரி பிரச்னையில் தீர்வு காண திமுக தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களுக்கு எதிராக எந்த திட்டம் வந்தாலும் அதனை அரசு எதிர்க்கும் என்றும் கூறினார்.
முன்னதாக மறைந்த திமுக தலைவர் கருணாநிக்கு பேரவையில் நெஞ்சுருக அஞ்சலி செலுத்தப்பட்டதற்கு சபாநாயகர், முதலமைச்சர் , துணை முதலமைச்சர் ஆகியோருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.