கோவை சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இவ்வழக்கின் விசாரணை எப்படி நடந்தது? எந்த ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்வோம்.
தமிழகத்தையே கொந்தளிக்கச் செய்த கோவை சிறுமி கொடூர கொலை வழக்கில், தூக்கு தண்டனைக்கு ஆளாகி இருக்கிறார் குற்றவாளி சந்தோஷ்குமார். கடந்த மார்ச் 25-ஆம் தேதி நடந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறை, சம்பவ இடத்தில் இருந்து பல முக்கிய ஆதாரங்களைத் திரட்டியது. சந்தோஷ்குமாரின் சட்டை மற்றும் லுங்கி, உல்லன் ஸ்கார்ஃப் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அந்த ஸ்கார்ஃபை பயன்படுத்தியே, சந்தோஷ்குமார் சிறுமியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. சிறுமியின் உடையில் இருந்த ரத்தக்கறை, சந்தோஷ்குமாருடையதுதான் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
26 பேர் கொடுத்த வாக்குமூலமும், வட்டாட்சியர் தங்கராஜ், வருவாய் அலுவலர் விஜயா ஆகியோர் அளித்த தகவலும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. டி.என்.ஏ பரிசோதனையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது சந்தோஷ்குமார்தான் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபணமாகியிருக்கிறது. அதில் குறிப்பிட்ட 3 ஆவணங்களை பிரதானமாக எடுத்துக் கொண்ட நீதிமன்றம், இந்த பரபரப்பு உத்தரவை வழங்கியிருக்கிறது.
குழந்தையை கடைசியாக பார்த்த ஹரிஹரன் என்பவர் அளித்த வாக்குமூலம், அரசு அதிகாரிகளான தங்கராஜ், விஜயா ஆகியோர் அளித்த தகவல், டி.என்.ஏ முடிவு ஆகியற்றை முக்கிய ஆவணங்களாக நீதிமன்றம் எடுத்துக் கொண்டிருக்கிறது. எதிர்தரப்பில் 7 பேர் சாட்சியம் அளித்தும், சந்தோஷ்குமாருக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இருந்தால், இக்கொடூர குற்றாத்தில் ஈடுபட்ட அவருக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம்.