கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி பன்னிமடை பகுதியில் 7 வயது சிறுமி காணாமல் போனார். 2 நாட்களுக்குப் பின் வீட்டிற்கு அருகேயே அவரது உடல் மீட்கப்பட்டது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அந்தச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. விசாரணையின் விளைவாக, சிறுமியின் வீட்டருகே வசித்து வந்த சந்தோஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். முதலில் கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை பிறகு போக்சோ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த 19ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சந்தோஷ்குமார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர் குற்றவாளி என போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் தண்டனை விவரம் குறித்து தற்போது வெளியாகியுள்ளது. அதில், போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு ஆயுள்தண்டனையும் 302 பிரிவின் படி மரண தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனிடையே கடந்த ஒன்றாம் தேதி கோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தடயவியல் சோதனை அறிக்கையில், சிறுமியை சந்தோஷ்குமார் மட்டுமின்றி வேறொரு நபரும் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்தது. அதனை சுட்டிக்காட்டி, இந்த வழக்கை மறு விசாரணை செய்ய கோரிக்கை விடுத்து சிறுமியின் தாய் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது.