சீர்காழி அருகே நெப்பத்தூரில் தனியார் செங்கல் சூளையில் கடந்த 17ஆம் தேதி கூலி தொழிலாளி சீனிவாசன் மர்ம மரணம் அடைந்தார். 11வது நாளாக உடலை வாங்க மறுத்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மறு உடற்கூறாய்வு செய்ய உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நெப்பத்தூரில் ஆர்.கே.பி செங்கல் சூளை இயங்கி வருகிறது. சீர்காழியில் வசிக்கும் ராஜஸ்தானை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு சொந்மான இந்த செங்கல் சூளையில் அதிகமான வடமாநிலத்தவரே பணியாற்றி வரும் நிலையில், உள்ளூரை சேர்ந்த ஒரு சிலர் கூலி வேலை செய்து வருகின்றனர். இங்கு நிம்மேலி கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் (42) என்பவர் கடந்த 27 ஆண்டுகளாக லோடு மேனாக பணிபுரிந் நிலையில், கூலி உயர்வு மற்றும் பணபலன்கள் குறித்து கேட்டதால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சீனிவாசனை வெளியேற்றினர்.
இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி அதிகாலை 3:30 மணிக்கு செங்கல் சூளைக்கு பணிக்கு வர சொல்லி செல்போன் அழைப்பு வந்ததாக மனைவி மணிமேகலையிடம் கூறிவிட்டு சீனிவாசன் சென்றுள்ளார். இந்நிலையில் காலை 6 மணிக்கு அதே செங்கல் சூளையில் தூக்கில் சடலமாக கிடந்தார் சீனிவாசன். குறைவான உயரத்தில் மண்டியிட்ட நிலையில் தூக்கில் தொங்கியது சந்தேகத்தை ஏற்படுத்தியது. கூலி உயர்வு மற்றும் பணபலன்கள் குறித்து கேட்டதால் சீனிவாசனை திட்டமிட்டு பணிக்கு அழைத்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக கூறி உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் 12 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்கல் சூளை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா அளித்த உறுதியை ஏற்று கிராமமக்கள் உடலை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 18 ஆம் தேதி தற்கொலைக்கு தூண்டியதாகவும் பட்டியலினத்தோர் வன்கொடுமை சட்டத்திலும் வழக்குப்பதிவு செய்து செங்கல் சூளை உரிமையாளர் சுரேஷ், அவரது மகன் சித்தார்த் மற்றும் இரவு மேற்பார்வையாளர் மோகன்ராஜ் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து 18ஆம் தேதி மாலை திருவெண்காடு போலீசார், கொலை வழக்கு பதியும் வரை சீனிவாசனின் உடலை கூறாய்வு செய்யக்கூடாது என தடுத்து நிறுத்திய உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் அரசு மருத்துவமனையில் மூன்று நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர். 20ஆம் தேதி மாலை சீனீவாசன் உடல் உடற்கூறாய்வு முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் தொடங்கியது. ஆனால், இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்யக்கோரி உடலை வாங்க மறுத்து சீனிவாசனின் உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் மருத்துவமனையில் இருந்து வெளியேறினர்.
இதைத் தொடர்ந்து சாலை மறியல், கண்டன ஆர்ப்பாட்டம் என போராட்டம் நாளுக்கு நாள் தொடர்ந்தது. சீனிவாசன் உடல் சிதைவடைந்ததால் நோய் தொற்று ஏற்படும் நிலை உருவானது. இதனையடுத்து உடலை மாவட்ட நிர்வாகமே அடக்கம் செய்வதற்கான பணிகளை 24ஆம் தேதி மாலை தொடங்கினர். அதனை தடுத்து நிறுத்தக் கோரி மூன்று இடங்களில் இளைஞர்கள் செல்போன் டவரில் ஏறி போராடினர். பெண் ஒருவர் மண்ணெண்ணை ஊற்றி தீ குளிக்க முயன்றார். இதனால் அந்த பணியும் நிறுத்தபட்டது.
25ஆம் தேதி பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக கூறி ஆர்.கே.பி செங்கல் சூளைக்கு வட்டாட்சியர் ஹரிதரன் சீல் வைத்தார். அங்கிருந்த வடமாநிலத்தவரை வெளியேறவும் உத்தரவிட்டார். 10 ஆம் நாளான நேற்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடினர். தொடர் போராட்டத்தால் இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரனைக்கு மாற்றி டி.ஜி.பி திரிபாதி நேற்று உத்தரவிடடார். முதல் உடல் கூறாய்வில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனக்கூறிய உறவினர்கள் மறு உடற்கூறாய்வு கோரி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால் 11 வது நாளாக சீனிவாசன் உடல் மருத்துவமனையிலேயே உள்ளது.