ரூ.10 லட்சம் கடனை திரும்ப தராததால் வியாபாரியை கடத்திச் சென்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ராயப்பேட்டை செல்லப் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் பைசுதீன்(48). இவர் மதுரையை சேர்ந்த ராஜா உசேன் என்பவரிடம் 6 மாதங்களுக்கு முன்பு தொழில் ரீதியாக 10 லட்சம் ரூபாயை கடனாக பெற்றார். ராஜா உசேன் மீது ஏற்கெனவே 1995-ஆம் ஆண்டு நடந்த வெடிகுண்டு சம்பவம் மற்றும் வில்லிவாக்கம் ராஜகோபால் கொலை தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
இதனையடுத்து நேற்று முன் தினம் குண்டு வெடிப்பு வழக்கிற்காக சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ராஜா உசேன் உட்பட 5 பேர் ஆஜராகி உள்ளனர். அதனைத்தொடர்ந்து சென்னை அண்ணா சாலை புகாரி ஹோட்டல் அருகே பைசுதீனை வரவழைத்து கடன் தொகையை கேட்டுள்ளனர். அதற்கு அவர் காலஅவகாசம் கேட்டதாக தெரிகிறது.
இதனால் கோபமடைந்த ராஜா உசேன் தனது மகன் முகமது சபியுல்லாவுடன் சேர்ந்து பைசுதீனை அடித்து உதைத்து காரில் கடத்திச் சென்றதாக சொல்லப்படுகிறது.
இதனை பார்த்த அப்பகுதிமக்கள் திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் ஆய்வாளர் மோகன்தாஸ், திருவல்லிக்கேணி பகுதி முழுவதும் தேடியுள்ளார். அப்போது கடத்திச் சென்ற பைசூதினை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே ராஜா அடித்து கொண்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் பைசுதீனை மீட்க முயற்சி செய்ததாக தெரிகிறது. அப்போது ராஜா உசேன் மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேர் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸை தாக்கி சட்டையை கிழித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசார், 5 பேரையும் கைது செய்து பைசுதீனை மீட்டுள்ளனர். விசாரணையில் கைதானவர்கள் மதுரையை சேர்ந்த ராஜா உசேன், முகமது சைபுல்லா, ரஹ்மதுல்லா, ஆசிப் கான், தவ்பிக் என தெரிய வந்துள்ளது.