தங்களுடைய விருப்பத்திற்கு மாறாக மகள் மணமுடித்ததால் விரக்தியடைந்த பெற்றோர் தங்களது இரண்டு பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
ஆத்தூர் அருகேயுள்ள தாண்டானூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் - ராணி தம்பதியின் மூத்த மகளான மோகனா, பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக மணிகண்டன் என்பவரை நேற்று திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிகிறது. ஆனால், உயிருக்கு அஞ்சி அவர்கள் காரிப்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் காவல்நிலையத்திற்கு வரவழைக்கப்பட்ட பெற்றோருடன் செல்ல மோகனா மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில், ராஜேந்திரன் வீட்டின் கதவு இன்று காலை வெகுநேரமாகியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அண்டைவீட்டார், அதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்ததில், ராஜேந்திரன், ராணி அவர்களது பிள்ளைகளான ஆர்த்தி, நவீன் ஆகிய நால்வரும் பூச்சி மருந்து அருந்திய நிலையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. தற்போது அந்த நால்வரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.