கோவை இருகூர் பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் பூபதி. 76 வயதான இவருக்கு சொந்தமாக இருகூரில் 41 லட்சம் ரூபாய் மதிப்பிலான 32.71 செண்ட் நிலம் இருந்தது. இவரது இளைய மகள் மாலதி (39), அவரது கணவர் பிரவீன்குமாருடன் காஞ்சிபுரம் மாவட்டம் ஆதம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், மாலதி தனது கணவருடன் சேர்ந்து நிலத்தை விற்பனை செய்ததாக பூபதிக்கு தகவல் வந்தது. இதுதொடர்பாக சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று பூபதி விசாரித்துள்ளார்.
அப்போது, 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் பெற்றோர் இறந்துவிட்டதாக போலி சான்றிதழ்களை சமர்பித்து, அந்த நிலத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் வேறு ஒருவருக்கு விற்பனை செய்து மாலதியும், அவரது கணவரும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், பூபதியின் சொத்துக்கு தான் சட்ட ரீதியான வாரிசு என்ற போலி சான்றிதழும் சமர்ப்பித்துள்ளார்.
இதுகுறித்து கேட்டபோது, பூபதியையும், அவரது மூத்த மகளையும், மாலதி மற்றும் அவரது கணவர் சேர்ந்து மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. நிலத்தை மோசடியாக விற்பனை செய்தது தொடர்பாக பூபதி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், போலி ஆவணங்கள் சமர்ப்பித்தல், மோசடி, நம்பிக்கையை மீறுதல், மிரட்டல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாலதி மற்றும் அவரது கணவர் பிரவீன்குமாரை சிங்காநல்லூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.