தவெக தலைவர் விஜய் KIRANSA
தமிழ்நாடு

தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு! அடுத்தக்கட்ட பாய்ச்சலில் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கலந்துகொள்ள அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

Rishan Vengai

2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு தேர்தல் களத்தில் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் குதித்திருக்கும் நிலையில், ஆளும் திமுக அரசின் 5ஆவது மற்றும் கடைசி முழு பட்ஜெட்டானது அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

அறிவிக்கப்பட்டிருக்கும் நிதிநிலை அறிக்கையில் பல திட்டங்கள் வரவேற்பை பெற்றாலும், விமர்சனங்களையும் பெற்றுள்ளது. இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பிலும் குறைகளை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இந்த மாத இறுதியில் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தவெக பொதுக்குழு கூட்டம்..

வெளியாகியிருக்கும் அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழு கூட்டமானது மார்ச் மாதம் 28ஆம் தேதி (28.03.2025) வெள்ளிக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு. சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் கழக விதிகளின்படி கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுக்குழுவில் கலந்துகொள்வதற்கான அழைப்புக் கடிதம் மின்னஞ்சல், வாட்ஸ் ஆப் மற்றும் தபால் வாயிலாக அனுப்பப்பட்டிருக்கிறது.

பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்புக் கடிதம் மற்றும் தலைமைக் கழகத்தின் அடையாள அட்டை ஆகியவற்றுடன் வருகை தந்து இப்பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் பெயரில் அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.