தருமபுரி அருகே பள்ளி நேரத்தில் குடிநீருக்காக அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் அலையும் நிலை நிலவுகிறது. படிக்கும் நேரத்தில் குடம் தூக்கி அலையும் நிலையில் மாணவர்கள் உள்ளனர்.
தருமபுரியை அடுத்த சோளக்கொட்டாயில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். தருமபுரி மாவட்டத்திலேயே சிறந்த பள்ளி என்று பெயர் பெற்ற இந்த பள்ளியில், குடிநீர் தேவைக்காக 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, 2 மினி தொட்டிகள், ஒரு கைம்பம்பு ஆகியவை பள்ளி வளாகத்தில் உள்ளன. ஆனால் இவை அனைத்தும் அண்மைக்காலமாக பழுதடைந்துள்ளன. இதனால், குடிக்க நீரின்றி மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். வகுப்பறை தேவைக்காக குடத்தை எடுத்துக்கொண்டு பள்ளி சுற்றுச்சுவர் அருகே உள்ள கைம்பம்பில், தண்ணீர் அடித்து எடுத்து வருகிறார்கள். வகுப்பறை நேரத்தில் இரண்டு மாணவர்கள் அடிபம்பில் தண்ணீர் அடிப்பதும் இரண்டு மாணவர்கள் சுற்றுச்சுவர் மீது அமர்ந்து குடத்தை வாங்கி மறுபுறம் உள்ள மாணவர்களுக்கு தருவதும், அவர்கள் குடத்தை வகுப்பறைக்கு கொண்டு வருவதுமான நிலை இருக்கிறது.
பள்ளியில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு குறித்து பள்ளி தலைமையாசிரியர், ஊராட்சி செயலரிடம் புகார் தெரிவித்துள்ளதாக கூறினார். தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, அரசு மேல்நிலை பள்ளியில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு குறித்த புகார் தனது கவனத்திற்கு வரவில்லை என்றும், விரைவில் குடிநீர் குழாய்கள் பழுது நீக்கி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.