கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதியால் நிரப்பப்பட்ட பணியிடங்கள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கோவையில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி லஞ்சம் வாங்கிய புகாரில் கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டுள்ளார். உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்காக சுரேஷ் என்பவரிடம் துணைவேந்தர் கணபதி 30 லட்சம் ரூபாய் பெற்றதாக புகார் எழுந்தது. இதற்காக சுரேஷிடம் துணைவேந்தர் கணபதி 1 லட்சம் ரூபாய் ரொக்கம், 29 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பெற்றதாகவும் தகவல் வெளியாகின. இந்தப் புகாரில், துணைவேந்தரின் வீடு மற்றும் பல்கலைக்கழகத்தில் உள்ள அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்போது துணைவேந்தர் கணபதி லஞ்சம் பெற்றது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் துணைவேந்தர் கணபதியால் நிரப்பப்பட்ட அனைத்து பணியிடங்கள் குறித்தும், சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதியின் தலைமையின் கீழ் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என, பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் சங்கத்தினர் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்களில் ஒரு பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர். அவரால் நிரப்பப்பட்ட பணியிடங்களை ரத்து செய்யவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல்கலைக்கழகத் துறைகள், உறுப்புக் கல்லூரிகளில் காலியாக இருந்த 80 பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பியதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக கூறப்படுகிறது. உதவிப் பேராசிரியர் பணி நியமனத்திற்காக 30 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது துணைவேந்தர் கணபதியை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இடைத்தரகராக செயல்பட்ட பேராசிரியர் தர்மராஜூம் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும், பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்விக்கூட இயக்குநர் மதிவாணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.